தங்க கடத்தல் வழக்கில் திருப்பம்- முதல்வருக்கு எதிரான ஆடியோ பதிவை வெளியிடுவதாக மிரட்டும் ஸ்வப்னா
- முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
- ஸ்வப்னாவின் புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே ஸ்வப்னா மீது கேரள முன்னாள் மந்திரி ஜலீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோர்ட்டு, ஸ்வப்னா மீது ஜாமீனில் வரத்தக்க வழக்கே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
மனு தள்ளுபடியானதும், ஸ்வப்னா, இன்னொரு பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
இது தொடர்பான ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும், அதனை இன்று வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். ஸ்வப்னாவின் இந்த புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.