இந்தியா

2 மாத விடுமுறையில் போகிறேன்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்: பங்கஜா முண்டே பரபரப்பு பேட்டி

Published On 2023-07-07 16:29 GMT   |   Update On 2023-07-07 16:29 GMT
  • 20 ஆண்டுகளாக அயராது கட்சிப்பணி செய்தும் என்னைப்பற்றிய வதந்திகள் பரப்பப்படுகின்றன.
  • சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு தொடர உள்ளேன்.

மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிர அரசியல், கட்சியில் தனது நிலை மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் மனநிலை தொடர்பாக அவர் கூறியதாவது:-

கட்சியில் நான் அதிருப்தியில் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இதுபோன்ற விவாதங்கள் ஏன் நடக்கின்றன? கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காததுதான் காரணமா? என்னை புறக்கணித்தனர். ஏன் என்று கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

20 ஆண்டுகளாக அயராது கட்சிப்பணி செய்துள்ளேன். இருந்தாலும், என்னைப்பற்றிய வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனது கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள். நான் சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ சந்திக்கவில்லை. வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை. பாஜகவின் சித்தாந்தம் எனது ரத்தத்தில் கலந்திருக்கிறது. வாஜ்பாய் மற்றும் கோபிநாத் முண்டேவின் பாதையில் நான் சென்றுகொண்டிருக்கிறேன். அதேசமயம் நான் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு தொடர உள்ளேன்.

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய சோதனைகள் நடக்கின்றன. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு பயப்படுகின்றனர். ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன் என்று நரேந்திர மோடி கூறினார். மக்கள் அதை விரும்பி ஆதரவு அளித்தனர்.

நான் கட்சியின் முடிவை எப்போதும் ஏற்றுக்கொள்வேன். யாருடைய முதுகிலும் குத்தியதில்லை. எனது சித்தாந்தங்களில் சமரசம் செய்யவேண்டியிருந்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயங்க மாட்டேன் என்று முன்பே கூறியிருந்தேன். நான் இப்போது இரண்டு மாத விடுமுறையில் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பங்கஜா முண்டேவின் பேட்டி குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பாஜகவில் உள்ள பலர் நீண்ட காலமாக தேசியவாத காங்கிரசுக்கு எதிராக போராடி வருவதாகவும், அக்கட்சியுடனான பாஜகவின் கூட்டணியை உடனடியாக ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், பங்கஜா முண்டேவிடம் பாஜக தலைமை பேசும், அவர் தொடர்ந்து கட்சி பணியாற்றுவார் என்றும் பட்னாவிஸ் கூறினார்.

Tags:    

Similar News