இந்தியா

டெல்லியில் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்: மரம், செல்போன் டவர் மீது ஏறி பெண்கள் தற்கொலை மிரட்டல்

Published On 2024-04-24 07:20 GMT   |   Update On 2024-04-24 07:23 GMT
  • மேகதாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி ஜந்தார் மந்திர் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், அதன் பின்னர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஒரு பெண் உள்ளிட்ட சில விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மரத்தின் மீது ஏறினர். கயிறுடன் ஏறி நின்ற அவர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த டெல்லி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் இறங்க மறுத்ததால், பெண் போலீசார் மரத்தின் மீது ஏறி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மரத்தை விட்டு இறங்க செய்தனர்.

இந்நிலையில் 2 பெண்கள் உள்ளிட்ட சில விவசாயிகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறினர்.


அரை நிர்வாணத்துடன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்ட அவர்கள் செல்போன் டவர் மீது தூக்கிட்டும், மேலே இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தமிழக விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் காலை முதல் பரபரப்பு நிலவி வருகிறது.





Tags:    

Similar News