துபாயில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் கடத்தி வந்த 172 பவுன் தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது
- துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது.
தங்க கடத்தலை கண்காணிக்க அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர விமான நிலையம் முழுவதும் மாறுவேடத்திலும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணித்தபோது அந்த நபர் தனது உள்ளாடையில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதில் 172 பவுன் இருந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தை அந்த பயணி, விமான நிலையத்தில் பணியில் இருந்து விமான நிறுவன ஊழியர்கள் இருவரிடம் கொடுத்தார்.
அவர் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு சென்று அங்கு காத்திருந்த இன்னொரு நபரிடம் சேர்த்தார். இவை அனைத்தையும் ரகசியமாக கண்காணித்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த பயணி கோழிக்கோட்டை சேர்ந்த முகமது பாசில் மற்றும் அவருக்கு உதவி செய்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
கைதான விமான நிறுவன ஊழியர்கள் இருவரும் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.