அரிசி, பருப்புக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை அமல் படுத்தமாட்டோம்- நிதி மந்திரி தகவல்
- அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.
- ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம்.
திருவனந்தபுரம்:
மத்திய அரசு சமீபத்தில் நடத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்தது.
அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வராதநிலையில் இந்த விலை உயர்வு அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், எனவே இந்த வரி உயர்வை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் கேரள சட்டசபையில் நேற்று நிதி மந்திரி பாலகோபால் இது தொடர்பாக கூறியதாவது:-
சாமானியர்களை பாதிக்கும் வரி உயர்வை மாநில அரசு எதிர்க்கிறது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம். முதல் மந்திரியும் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பொதுமக்களை பாதிக்கும் உணவு தானியங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி உயர்வை கேரளாவில் அமல் படுத்தமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.