விவசாய கடன் தள்ளுபடி, 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு... மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிட்டார்
- அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.
- பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது.
மும்பை:
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார். மத்திய மந்திரி பியூஸ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். லட்கி பஹின் யோஜனா வரம்பு ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். விருத் பென்சன் யோஜனா உச்ச வரம்பு ரூ.1500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும்.
25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விலையை சீராக வைத்திருக்க சந்தையில் தலையிடப்படும். அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத்தை மிகவும் விரும்பப்படும் மேக்-இன் இந்தியா இடமாக மாற்ற விரும்புகிறோம். ஏரோநாட்டிகல் மற்றும் விண்வெளியில் கவனம் செலுத்தப்படும. செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மகாராஷ்டிராவில் அமைகிறது. 1 லட்சம் கோடி பொருளாதாரமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்க விரும்புகிறோம் என்பது உள்பட பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு அமித்ஷா கூறியதாவது:-
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி வாக்குறுதிகளையும், சித்தாந்தங்களையும் அவமதிக்கிறது.
உத்தவ் தாக்கரேவிடம் கேட்க விரும்புகிறேன். வீர் சாவர்க்கரைப் பற்றி இரண்டு நல்ல வார்த்தைகளைப் பேசுமாறு ராகுல் காந்தியை அவர் கேட்க முடியுமா? எந்த காங்கிரசாரும் பாலாசாகேப் தாக்கரே பற்றி 2 நல்ல வார்த்தைகள் பேச முடியுமா?
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு கேட்கிறது. காங்கிரஸின் மாநிலத் காங்கிரஸ் தலைவர் நானா படோலே இதை ஒப்புக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், காங்கிரசின் இந்த திட்டத்திற்கு உடன்படுகிறீர்களா? மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது.
சரத் பவாரை நான் கேட்க விரும்புகிறேன், 2004-2014 வரை 10 ஆண்டுகள் நீங்கள் காங்கிரசின் மத்திய அரசில் மந்திரியாக இருந்தீர்கள். மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
இவ்வாறு அமித்ஷா பேசினார்.