செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை சந்தித்து விடுதலை ஆவார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சென்னை மெட்ரோ ரெயில் திட்ட முதல் கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படுத்தியது மாதிரி 2-வது கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டோட நிலைப்பாடு.
- கச்சத்தீவை தாரை வார்ப்பதாக திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமருடனான சந்திப்பு ஒரு இனிய சந்திப்பாக நடந்தது. பிரதமர் எங்களிடம் மகிழ்ச்சியோடு பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் இருக்கிறது.
ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று 3 முக்கியமான கோரிக்கைகளை நான் அவரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்ட முதல் கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படுத்தியது மாதிரி 2-வது கட்ட பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டோட நிலைப்பாடு.
இந்த 2-வது கட்ட பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள 2019-ம் ஆண்டு மாநில அரசின் நிதியில் இருந்து கடன் பெற்று பணிகள் தொடங்கி, பின்பு ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய உள்துறை மந்திரி இதை ஏற்றுக்கொண்டு 2020-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது.
ஒன்றிய நிதி மந்திரி இதற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை 2021-ம் ஆண்டு வழங்கியது.
இந்த பணிகளுக்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருந்தாலும், இதுவரை ஒன்றிய மந்திரியின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால் இதற்கான ஒன்றிய அரசின் நிதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை.
இதனால் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே தாமதமின்றி இந்த நிதியை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளேன். இது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் தேசிய கல்விக்கொள்கையில் கையெழுத்திடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறேன் என்றார். அதைத்தொடர்ந்து காவிரி பிரச்சனை பற்றி கேட்டதற்கு அது கோர்ட்டில் இருப்பதால் பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.
கச்சத்தீவை தாரை வார்ப்பதாக திரும்ப திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
செந்தில்பாலாஜி தன் மீதான வழக்குகளை சட்டப்படி சந்தித்து விடுதலை பெறுவார் என்றார்.