சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்- வீடியோ வைரலானதால் சஸ்பெண்டு
- சம்பவத்தன்று இரவு புஷ்பேந்திரா அனுமன்கஞ்ச் பகுதி வழியாக சென்ற போது, சாலையில் நடந்து சென்ற தனது தோழியை கண்டுள்ளார்.
- தோழி குடிபோதையில் இருந்ததாகவும், அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாகவும் போலீஸ்காரர் கூறினார்.
போபால்:
மத்தியபிரதேச தலைநகர் போபால் பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா. போலீஸ்காரரான இவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் துணைபோலீஸ் கமிஷனர் ராம் சினேகி மிஸ்ரா கூறுகையில், வீடியோவில் உள்ள பெண் போலீஸ்காரர் புஷ்பேந்திராவின் தோழி ஆவார்.
சம்பவத்தன்று இரவு புஷ்பேந்திரா அனுமன்கஞ்ச் பகுதி வழியாக சென்ற போது, சாலையில் நடந்து சென்ற தனது தோழியை கண்டுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாகவும் போலீஸ்காரர் கூறினார்.
எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக அந்த பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிட முன்வந்ததாகவும் அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளாததால் அவரை பிடித்து மோட்டார் சைக்கிளில் உட்கார சொன்னதாகவும் அந்த போலீஸ்காரர் கூறினார்.
எனினும் சம்பவம் நடந்த போது அவர் போலீஸ் சீருடையில் இருந்ததால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே மத்தியபிரதேச போலீசார் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரும், வீடியோவில் உள்ள அந்த பெண்ணும் நண்பர்கள் ஆவர். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை என அந்த பெண் எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்துள்ளார். எனினும் முதல்கட்டமாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைரீதியாக விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.