பெங்களூருவில் ஆன்லைன் செயலி மூலம் ரூ.90 லட்சத்தை இழந்த டாக்டர்
- டாக்டர் ஆன்லைன் செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து அக்டோபர் 4-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்தார்.
- பெங்களூரு நகரில் நடந்து வரும் தொடர் சைபர் குற்றங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் செயலி மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த டாக்டர் ஆன்லைன் செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து அக்டோபர் 4-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட செயலியை தொடர்பு கொண்டு கேட்டபோது டாக்டர் செய்த முதலீட்டில் ரூ.40 லட்சம் லாபம் ஈட்டியதாக சொன்னார்கள். இதையடுத்து லாபத்தொகையை டாக்டர் திருப்பி கேட்டார். அப்போது அவர்கள் லாபத்தொகையை கொடுக்க ரூ.8 லட்சம் வழிகாட்டுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் பெங்களூரு ஐகிரவுண்ட்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் நடந்து வரும் தொடர் சைபர் குற்றங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.