மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் நீட்டிப்பால் மருத்துவ சேவை பாதிப்பு
- அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்கு திரும்பினர்.
- தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணி புறக்கணிப்பு தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 42 நாட்களுக்கு பிறகு ஜூனியர் டாக்டர்கள், பேராட்டத்தை கைவிட்டு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்கு திரும்பினர்.
தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணி புறக்கணிப்பு தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில், அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பயிற்சி ஜூனியர் டாக்டர்கள் நேற்று முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். இன்றும் அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.
இதனால் மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.