14 பேர் பலியான ரெயில் விபத்துக்கு டிரைவர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்
- ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
- ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
திருப்பதி:
ஆந்திரப் மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரெயில், விசாகப்பட்டினம் பலாசா ரெயிலில் பின்னால் இருந்து மோதியது.
இதில் 14 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த கோரமான ரெயில் விபத்து தென்னிந்தியாவையே உலுக்கியது.
இந்த நிலையில் இந்திய ரெயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் விபத்து ஏற்படுத்திய ஒரு ரெயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரெயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
"நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம். ஆந்திர ரெயில் விபத்துக்கு காரணமான 2 ஊழியர்களும் அதில் பலியாகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.