இந்தியா

பதுக்கி வைத்து இருந்த பட்டாசால் விபத்து- பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியது

Published On 2023-08-09 04:45 GMT   |   Update On 2023-08-09 04:45 GMT
  • பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.
  • பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தோசிப்புடி நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.

நேற்று அதிகாலை பதுக்கி வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த நிலையில் பட்டாசுகள் அங்குள்ள பெட்ரோல் பம்ப் மீது விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

பெட்ரோல் பங்கில் இருந்து தீப்பிழம்பு வானத்தை முட்டும் அளவு கிளம்பியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என எண்ணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

தீயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது. வெடி சத்தம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News