கூலிப்படைக்கு ரூ.75 லட்சம் கொடுத்து மகனை கொல்ல முயன்ற தந்தை: துப்பாக்கி பறிமுதல்- 6 பேர் கைது
- கைது செய்யப்பட்ட கூலி படையினரிடமிருந்து கை துப்பாக்கி, போலி எண் பலகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சம்பவம் நடந்த இடத்தில் உணவு வினியோக நிறுவனத்தின் பைகள் கிடந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புனே:
புனேவை சேர்ந்தவர் தினேஷ் சந்திரா என்ற பாலா சாகேப் ஆர்கேட் (வயது65). ரியல் எஸ்டேட் அதிபர் இவரது மகன் தீரஜ் (வயது 38). தீரஜின் நடத்தையில் தினேஷ் சந்திரா சந்தேகப்பட்டார். இதனால் குடும்பத்தில் மகனுக்கும் தந்தைக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது.
தீரஜின் நடவடிக்கையால் தனது ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும் என்று தினேஷ் சந்திரா கருதினார்.
இதனால் மகனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக கூலிப்படை உதவியை நாடினார். கூலிப்படைக்கு ரூ.75 லட்சம் பேரம் பேசி ரூ.20 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார்.
கூலிப்படையினர் புனே ஜே.எம். சாலையில் தீரஜ் சென்ற போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் குறி தவறியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலை கும்பலிடமிருந்து தப்பிய தீரஜ் இது சம்மந்தமாக புனே போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் கமிஷனர் அமிதேஷ்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஷபீர் சயித் கொலை முயற்சி நடந்த ஜே.எம். சாலையில் இருந்து கோத்ரூட்டில் உள்ள சுதர்தாரா வரை சுமார் 200 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
இதில் தீரஜை கொல்ல முயன்றவர்கள் அடையாளம் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தி கூலிப்படையாக செயல்பட்ட அசோக் தோம்ரா, பிரசாந்த் காட்ஜ், பிரவீன் குட்லே, யோகேஷ் ஜாதவ் மற்றும் சேட்டான் போக்லே ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தீரஜ்ஜின் தந்தையான தினேஷ் சந்திரா மகனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கூலி படையினரிடமிருந்து கை துப்பாக்கி, போலி எண் பலகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உணவு வினியோக நிறுவனத்தின் பைகள் கிடந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினேஷ் சந்திரா தனது மகனை கண்காணிக்க அவரது காரில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தியுள்ளார். அதன் மூலம் தீரஜ் எங்கு இருக்கிறார் என்பன உள்பட அவரது நடவடிக்கைகளை கண்காணித்து கூலிப்படை இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது.
இந்த சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.