டெல்லியில் பலத்த மழை... இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
- பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
- நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று டெல்லியில் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. டெல்லி-குருகிராம் விரைவுச்சாலையில் டெல்லி செல்லும் பிரதான பாதை மற்றும் சர்வீஸ் லேன் ஆகியவற்றில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழையால் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் திருப்பி விடப்பட்டது. நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.