இந்தியா

பீகாரில் வருகிற 3-ந்தேதி இந்தியா கூட்டணியின் முதல் பிரசார பொதுக்கூட்டம்

Published On 2024-02-26 05:16 GMT   |   Update On 2024-02-26 05:16 GMT
  • 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.
  • மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பாட்னா:

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கின.

பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகியதால் அந்த கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு செய்வதிலும் இந்தியா கூட்டணியில் சலசலப்பு காணப்படுகிறது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்களால் பொதுவான குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க இயலவில்லை.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் முக்கிய நகரங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு முதல் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. அதுபோல முதல் பிரமாண்ட கூட்டத்தையும் அந்த நகரிலேயே நடத்த தீர்மானித்துள்ளனர். வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்று தெரிகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News