கேரள மூதாட்டியிடம் வீடியோ காலில் பேசிய போப் பிரான்சிஸ்
- போப் பிரான்சிஸ் வீடியோ காலில் பேசியது மூதாட்டி சோசம்மாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
- கடந்த 2022-ம் ஆண்டு கனடாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, மூதாட்டி சோசம்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த 95 வயது மூதாட்டி சோசம்மா ஆண்டனி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சோசம்மாவின் பேரன் ஜார்ஜ் கூவக்காட்.
கடந்த 2-ந்தேதி மூதாட்டி சோசம்மா வீட்டில் இருந்த செல்போனுக்கு வாடிகன் நகரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் போப் ஆண்டவர் புனித போப் பிரான்சிஸ் பேசினார். அவர் மூதாட்டி சோசம்மாவுடன் வீடியோ காலில் பேசினார்.
போப் பிரான்சிஸ் இத்தாலிய மொழியில் பேசினார். மூதாட்டி சோசம்மா மலையாளத்தில் பதிலளித்தார். இருவரது உடையாடல்களும், இருவரும் புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பு செய்து தெரிவிக்கப்பட்டது. அதன்மூலம் இருவரும் சுமார் 4 நிமிடங்கள் வரை பேசினர்.
திடீரென போப் பிரான்சிஸ் வீடியோ காலில் தன்னுடன் பேசியது மூதாட்டி சோசம்மாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் உற்சாக மிகுதியில் போப் ஆண்டவரை பார்த்து கையால் சைகை காண்பித்தார். அதற்கு அவரும் பதிலுக்கு கையால் சைகை காண்பித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு கனடாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, மூதாட்டி சோசம்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சோசம்மாவின் பேரன் ஜார்ஜ் கூவக்காட் போப் பிரான்சிஸ்-ன் வெளிநாட்டு பயணங்களை ஒருங்கிணைக்கும் நெருக்கமான குழு ஒன்றில் இருக்கிறார்.
இதனால் மூதாட்டி சோசம்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போப் பிரான்சிசுக்கு தெரியவந்தது. பின்பு தொற்று குணமாகி நாடு திரும்பினார் சோசம்மா. அதன்பிறகு கேரளாவிலேயே இருந்து வந்தார்.
இந்தநிலையில் அவரது பேரனான ஜார்ஜ் கூவக்காட்டுக்கு தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அவரது நலன் பற்றி விசாரிப்பதற்காக போப் பிரான்சிஸ் போனில் வீடியோ காலில் வந்து மூதாட்டி சோசம்மாவிடம் பேசினார்.
மூதாட்டி சோசம்மாவுடன் போப் பிரான்சிஸ் பேசியபோது, அவரது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியுடன் போப் பிரான்சிஸ் வீடியோ காலில் பேசுவதை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
போப் பிரான்சிஸ் போனில் வீடியோ காலில் பேசியது குறித்து கேட்டபோது, அவருக்காக பிரார்த்தனை செய்வேன் என்று கூறியதாகவும், அதற்கு அவர் எனது பிரார்த்தனை தனக்கு தேவை என்றும் தெரிவித்ததாகவும் மூதாட்டி சோசம்மா கூறினார்.
மேலும் ஜார்ஜ் கூவக்காட்டை போன்று நம்பிக்கைக்குரிய பேரனை வளர்த்திருப்பதாக தன்னை போப் பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.