சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது- கெஜ்ரிவால் பதிலடி
- அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
- சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவாகி இருந்தது. அவரது வங்கி லாக்கரையும் சி.பி.ஐ. நேற்று சோதனை செய்தது.
டெல்லி அரசியலில் சி.பி.ஐ. சோதனை, விசாரணை, சிறப்பு சட்டசபை கூட்டம் என்ற பரபரப்புக்கு இடையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆரம்ப காலத்தில் தன்னை பின் பற்றி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஆனாலும் மக்கள் பாஜகாவை நம்பவில்லை. பிரபலமான ஒருவரை வைத்து தனி நபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் பொதுவானது தான். பா.ஜனதாவும் தற்போது அன்னா ஹசாரேயை வைத்து அதைத்தான் செய்கிறது.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.