இந்தியா

கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு வென்ற வியாபாரி திடீர் தற்கொலை

Published On 2024-02-05 04:59 GMT   |   Update On 2024-02-05 04:59 GMT
  • பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பம்பர் குலுக்கல் நடத்தப்படும். இதில் முதல் பரிசுத்தொகை கோடிகளில் வழங்கப்படும்.

மேலும் ஏராளமானோருக்கு லட்சங்கள் மற்றும் ஆயிரங்களிலும் பரிசுத் தொகை கிடைக்கும். இதனால் கேரளாவில் பம்பர் பரிசு குலுக்கல் நடக்கும் போது, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்களும் பம்பர் குலுக்கல் லாட்டரிகளை வாங்குவார்கள்.

அவ்வாறு வாங்கிச் செல்பவர்கள் பம்பர் பரிசையும் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு பெற்ற வியாபாரி ஒருவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெல்லிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் விவேக் ஷெட்டி (வயது37). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடைக்குள் விவேக் ஷெட்டி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதியதில், விவேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

கடந்த 4 மாதங்களுககு முன்பு தான் லாட்டரி மூலம் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக கிடைத்திருப்பதால், அவருக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லை. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால் விவேக் எதற்காக தற்கொலை செய்தார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவேக்கிற்கு ஆர்த்தி என்ற மனைவியும், அன்வி என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News