இந்தியா (National)

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published On 2024-07-30 07:21 GMT   |   Update On 2024-07-30 07:21 GMT
  • நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்.
  • கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசினார்.

புதுடெல்லி:

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு மேல் சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் சபை தலைவரும், துணை ஜனாதிபதிபதியுமான ஜெகதீப் தன்கர் பேசும் போது "வயநாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு. காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது, இந்த நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது. நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்கு ராணுவம் சென்றதா, மீட்பு பணிகள் குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவை தலைவரான நீங்கள் தகவல் கொடுக்கிறீர்கள். அரசிடம் இருந்து நாங்கள் தகவலை எதிர்பார்க்கிறோம் என்றார்.

அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பல்வேறு கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். 500 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். நிலைமையை மத்திய அரசு உணர வேண்டும். கேரள அரசிடம் போதிய நிதி இல்லை. மத்திய அரசு உதவ வேண்டும்.

நாங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். துயரமான நேரத்தில் எங்களுக்கு உதவுங்கள். உடனடியாக நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

வயநாடு நிலச்சரிவு விஷயத்தை தயவு செய்து அரசியலாக்க வேண்டாம் என்று மேல்சபை தலைவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசும் போது, "கேரள முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டு அறிந்து இருக்கிறார். கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கேரள அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது. தற்போது அங்கு சிக்கியவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம்" என்றார்.

Tags:    

Similar News