இந்தியா

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வுக்கு 30 இடங்கள் வரை கிடைக்கும்- அமித்ஷா

Published On 2024-05-29 07:59 GMT   |   Update On 2024-05-29 07:59 GMT
  • கிழக்கு மண்டலத்தில் ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுக்கும். இது நிச்சயம் நடக்கும்.
  • தென் மாநிலங்களில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் அதிக இடங்களை பா.ஜ.க. தான் பிடிக்கும்.

மத்திய மந்திரி அமித்ஷா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தெற்கிலும், கிழக்கு பிராந்தியத்திலும் கணிசமான வெற்றி கிடைக்கும். மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாதான் அதிக இடங்களில் வெற்றி பெறும். மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 24 முதல் 30 இடங்கள் வரை எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒடிசாவில் 21 தொகுதிகள் இருக்கின்றன. அதில் 17 தொகுதிகளுக்கு நாங்கள் குறி வைத்து இருக்கிறோம். ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளில் 75 இடங்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அது போல தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 10 இடங்கள் வரை எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் எங்களது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்கும்.

கிழக்கு மண்டலத்தில் ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுக்கும். இது நிச்சயம் நடக்கும்.


தென் மாநிலங்களில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் அதிக இடங்களை பாரதிய ஜனதா தான் பிடிக்கும். இதன் மூலம் 400 இடங்கள் என்ற எங்கள் இலக்கு நிச்சயம் நிறைவேறும்.

2014-ம் ஆண்டில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் கூறினோம். யாரும் நம்பவில்லை. ஆனால் எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்தது.

2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று கோஷம் எழுப்பினோம். ஆனால் அரசியல் நிபுணர்கள் அதை ஏற்கவில்லை. கடைசியில் நாங்கள் சொன்னது நடந்தது.

அதுபோலதான் இந்த தடவையும் நாங்கள் சொல்வதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். 400 இடங்கள் என்ற இலக்கு நிச்சயம் நிறைவேறும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Tags:    

Similar News