பா.ஜனதா- காங்கிரசை வீழ்த்தி எம்.எல்.ஏ.வான டிபன் டெலிவரி தொழிலாளி
- தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
- மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.
போபால்:
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒழுகும் மண் குடிசை வீட்டில் வசிக்கும் தொழிலாளி சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும், 2-வது இடத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரத்தை பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கமலேஷ்வர் டோடியார் பெற்றுள்ளார். 33 வயதான இவர் தனது பள்ளி பருவ காலத்திலேயே கல்வி கற்க கடுமையான போராட்டங்களை சந்தித்தவர். அவரது தாயார் கூலி வேலைக்கு சென்றும், கோழி வளர்ப்பில் கிடைத்த முட்டைகளை விற்றும் அதில் கிடைத்த பணத்தில் படிக்க வைத்தார்.
ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த கமலேஷ்வருக்கு மக்கள் பணியாற்ற வேண்டும், பிற்படுத்தப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின, தாழ்த்தப்பட்ட பல்வேறு மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக பொது சேவையில் ஆர்வத்துடன் பணியாற்றினார். இதனுடன் டிபன் டெலிவரி செய்யும் தொழிலையும் மனம் கூசாமல் செய்தார். டெல்லியில் சட்டப்படி பண்பை படித்த போதும் அங்கும் டிபன் டெலிவரி தொழிலாளியாகவே வலம் வந்தார் கமலேஷ்வர்.
ஆனாலும் அவரது உழைப்பு மற்றும் மக்கள் சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. கடந்த இரண்டு முறை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் விடாமுயற்சியுடன் தனது சேவையை தொடர்ந்தார் கமலேஷ்வர் டோடியார்.
இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட பாரத் ஆதிவாசி இயக்கத்தின் சார்பில் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் கமலேஷ்வர் டோடியார். இந்த தொகுதியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக செல்வாக்குடன் களத்தில் இறங்கி பணியாற்றினர். ஆனாலும் கமலேஷ்வர் மனம் தளராமல் தனது ஏழ்மையை எண்ணி ஒதுங்கி விடாமல் தேர்தலில் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 66 ஆயிரத்து 601 ஓட்டுகளும், பாரதிய ஜனதா வேட்பாளருக்கு 41 ஆயிரத்து 584 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
இவர் சார்ந்துள்ள புதிய கட்சியான பாரத் ஆதிவாசி இயக்கம் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாக கொண்ட கட்சி. ஆனாலும் மத்திய பிரதேசத்தில் கமலேஷ்வரின் எளிமையான மக்கள் சேவையே அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளது.
மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. தேர்தலின் போது மோட்டார் சைக்கிளிலேயே தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பணம் இல்லாததால் சாப்பிடாமல் பசித்த வயிற்றுடனே பிரசாரம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட கார் வசதி இல்லாததால் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டமன்ற செயலகத்திற்கு ஆவணங்களை சமர்ப்பிக்க மோட்டார் சைக்கிளிலேயே சென்றுள்ளார் கமலேஷ்வர் டோடியார். பழங்குடியின சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் அதற்கு தேவையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற இருப்பதாக கமலேஷ்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சார்ந்துள்ள பாரத் ஆதிவாசி இயக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தவும், சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் நமது இயற்கை உலகத்தை பாதுகாக்கவும், தூய்மையான ஆற்றலை ஊக்குவிக்கவும் மாசுபாட்டை குறைக்கும் கொள்கைகளை எங்கள் இயக்கம் ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் என்றாலே கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த காலத்தில் கமலேஷ்வர் டோடியார் தனது ஏழ்மையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துள்ளார். ஆனால் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பணக்கார எம்.எல்.ஏ.வாக ஸ்பெக்ட்ரம் என்பவர் உள்ளார். அவருக்கு 223 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எளிய சாமானியராக, எவ்வித பணபலமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பிரதான அரசியல் கட்சிகளை வீழ்த்தி அம்மாநிலத்தில் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித் துள்ளார் கமலேஷ்வர் டோடியார்.
இவரது எளிமையான வாழ்க்கை, அவர் அரசியலில் சாதித்த வெற்றி, ஏழ்மையிலும் மக்கள் பணியாற்றினால் உரிய அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கு முக்கிய உதாரணமாக பேசப்படுகிறது.