பாராளுமன்றத்தில் இன்றும் அமளி: மேலும் 40 எம்.பி.க்கள் சஸ்பெண்டு
- கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
- இதுவரை மொத்தம் 141 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் ஒரு கும்பல் புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். இதனால் அவையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது.
இதையடுத்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
12 மணிக்கு மீண்டும் சபை கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், சுப்ரியா சுலே, சசிதரூர், மணிஷ் திவாரி, டிம்பிள் யாதவ் உள்பட 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 141 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தி,மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
பாராளுமன்றத்துக்கு வெளியில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்.கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பானர்ஜி என்ற எம்.பி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை கேலி செய்யும் வகையில் மிமிக்ரி செய்தார். இந்த செயலுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கல்யாண் பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.