அதிக நாட்கள் முதல்-மந்திரி பதவி: எடியூரப்பாவை முந்தும் சித்தராமையா
- நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார்.
- கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.
கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்-மந்திரியாக பலர் பொறுப்பேற்று உள்ளனர்.
நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகளில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.
நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார்.
இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்-மந்திரிகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளனர்.