வயநாடு தொகுதிக்கு பொம்மை எம்.பி. தேவையில்லை- ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. வேட்பாளர் பதிலடி
- வயநாடு தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை.
- வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பிரதமர் மோடி விமானம் மூலம் இங்கு வந்து மீட்பு பணிகளை கண்காணித்தார்.
திருவனந்தபுரம்:
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்டோருடன் வந்து மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ரோடு-ஷோ சென்றனர். அதன் தொடர்ச்சியாக நடந்த பிரசார கூட்டத்தில் இருவரும் பேசினர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, "பாராளுமன்றத்தில் 2 பிரதிநிதிகள் உள்ள தொகுதியாக வயநாடு இருக்கும். பிரியங்கா காந்தி அதிகாரபூர்வ வயநாடு தொகுதி எம்.பி.யாக இருப்பார். நான் அதிகாரபூர்வமற்ற எம்.பி.யாக இருப்பேன்" என்று கூறினார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். நீலம்பூரில் நடந்த பா.ஜக. வட்டார கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது:-
வயநாடு தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை. காந்தி குடும்பத்தை சேர்ந்த இளைய மைந்தர்கள் சுற்றுலா பயணிகளை போல இங்கு வர தொடங்கி உள்ளனர். மக்களுடன் எப்போதும் இருக்கக்கூடிய ஒருவர் தான் வயநாடு தொகுதிக்கு தேவை. பொம்மை எம்.பி. தேவையில்லை.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பிரதமர் மோடி விமானம் மூலம் இங்கு வந்து மீட்பு பணிகளை கண்காணித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரண உதவியை கூட கேரள அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் கடந்த சில ஆண்டுகால வளர்ச்சி கொள்கைகளை முன்வைத்து வாக்கு கேட்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.