இந்தியா

கிராம சபை கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த ஏற்பாடு

Published On 2022-12-19 05:05 GMT   |   Update On 2022-12-19 06:59 GMT
  • கேரளாவில் இனி நடைபெறும் கிராம சபை கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • புதிய செயலியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்பதில்லை என்று புகார் எழுந்தது.

கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற அதிக அளவு மக்கள் பங்கேற்க வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் பங்கேற்பு இல்லாவிட்டால் அந்த தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற முடியாது.

இதனால் கிராம நிர்வாகத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. மேலும் கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதியையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் உருவானது.

இதனை தவிர்க்க தற்போது கேரள அரசு புதிய முயற்சியை தொடங்கி உள்ளது. அதன்படி கேரளாவில் இனி நடைபெறும் கிராம சபை கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் நடந்தால் அதிக அளவில் மக்கள் பங்கேற்பு இருக்கும் என்றும், இதன்மூலம் தீர்மானங்களையும் எளிதில் நிறைவேற்ற முடியும் எனவும் கேரள அரசு கருதுகிறது.

இதற்காக புதிய செயலியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த செயலி மூலம் தீர்மானங்களை நிறைவேற்றவும், பங்கேற்பாளர்களை அடையாளம் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags:    

Similar News