கேரளாவில் 25,231 வாக்குச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு- 5 மாவட்டங்களில் 144 தடை
- 742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
- கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மத்திய மந்திரி அமித்ஷா, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பல இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சியினருக்கிடையே மோதலும் நடந்தது.
இந்நிலையில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (26-ந்தேதி) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
வாக்காளர்கள் ஓட்டு போடுவற்காக 25,231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த 1,903 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 75 சதவீத வாக்குச்சாவடிகள் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் 144 தடையை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 144 தடை நேற்று(24-ந்தேதி) நேற்று மாலை 6 மணிக்கே அமலுக்கு வந்தது.
அந்த மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி வரை தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கிறது.
இந்த மாவட்டங்களில் 5 பேருக்கு மேல் கூடுதல், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.