சமூக சேவையில் சில்வர் ஜூப்ளி- தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி
- லோகநாதன் சிறுவயது முதலே ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
- கடந்த 25 வருடங்களாக இதுவரை அவர் 1500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார்.
சூலூர்:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடுவதோடு, பல்வேறு சேவைகள் செய்து வரும் தன்னார்வலர்களை பாராட்டியும் வருகிறார்.
அந்த வகையில் இந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில், தனது சிறுவயது முதலே தன் ஊதியத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து உதவி வரும் கோவையை சேர்ந்த கூலித்தொழிலாளியான லோகநாதன் குறித்தும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி பேசியதுடன், அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
சூலூர் பகுதியில் வசித்து வரும் லோகநாதன் சிறுவயது முதலே ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். லோகநாதன் தன் ஊதியத்தில் ஒரு பகுதியை குழந்தைகளுக்கு உதவ நன்கொடையாக வழங்கி வருகிறார். கடந்த 25 வருடங்களாக இதுவரை அவர் 1500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார்.
குறிப்பாக அவர் கழிவறையை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த உதவிகளை செய்து வருகிறார். இதுதவிர பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயன்படுத்தப்பட்ட சட்டைகளை பெற்று ஏழை, எளிய குழந்தைகளுக்கு கொடுக்கும் சேவையையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
பிரதமர் மோடி பாராட்டியது குறித்து லோகநாதன் கூறியதாவது:-
நான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன்பிறகு வறுமை காரணமாக என்னால் படிக்க முடியவில்லை. எனவே வெல்டிங் மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இருந்த போதும் வறுமையில் வாடும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆர்வம். அதற்காக கழிவறைகளை சுத்தம் செய்வதில், கிடைக்கும் பணத்தை சேமித்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறேன்.
இந்த சேவைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விருது பெற்றிருந்தாலும், பிரதமர் மோடி எனது சேவையை பாராட்டி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதை நான் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
பிரதமரின் இந்த பாராட்டையும், பெருமையையும் கோவை மாவட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தூய்மை பணியை செய்து கொண்டு மக்கள் சேவையாற்றி வரும் என்னை உலகம் முழுக்க தெரியப்படுத்திய பிரதமருக்கு நன்றி. பிரதமரின் பாராட்டு மேலும் பல சேவைகள் செய்ய என்னை ஊக்குவித்துள்ளது.