இந்தியா

பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி- பிரதமர் மோடி பேச்சு

Published On 2022-09-17 10:12 GMT   |   Update On 2022-09-17 10:12 GMT
  • ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
  • கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதற்கு முன்பாக, ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நமீபியாவில் இருந்து இந்தியா வந்துள்ள எட்டு சிறுத்தைகள் நம் விருந்தினர்கள். அவர்களைக் கைதட்டி அன்புடன் வரவேற்குமாறு உங்கள் அனைவரையும், அனைத்து நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

என் பிறந்த நாளில், நான் என் அம்மாவிடம் சென்று, அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவது வழக்கமாக கொண்டிருந்தேன். இன்று என்னால் அவரிடம் செல்ல முடியவில்லை. ஆனால் பழங்குடியினர் பகுதிகளிலும் கிராமங்களிலும் கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டின் இந்தியாவிற்கும் இந்த நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் நமது பெண்களின் சக்தி பிரதிநிதித்துவமாக இருப்பது. இன்றைய புதிய இந்தியாவில் பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி பறக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்துள்ளோம். இன்று நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். இந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு சகோதரியாவது இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்ளூர் தயாரிப்புகளை பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News