இந்தியா

பிரியங்கா செயல் தலைவர் ஆகிறார்? காங்கிரஸ் அடுத்த அதிரடிக்கு தயாராகிறது

Published On 2024-07-27 06:56 GMT   |   Update On 2024-07-27 06:56 GMT
  • டெல்லி மேலிட தலைவர்களும் காங்கிரசை வலுப்படுத்த பிரியங்காவின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று கருதுகிறார்கள்.
  • இந்திராவின் வலிமையான தலைமையை இந்தியா இன்றும் கொண்டாடுகிறது.

அகில இந்திய காங்கிரசில் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி பொறுப்புக்கு பிரியங்கா வரவேண்டும் என்ற எண்ணமும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு துணையாக பிரியங்காவும் பிரசார களத்தில் இறங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. வரும் காலங்களில் பிரியங்காவும் கை கொடுத்தால் காங்கிரசை கை தூக்கி விட முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் வட மாநிலங்களில் அவரை ஏற்க காங்கிரசார் விரும்பவில்லை. அதே போல் ராகுலை அறிவிக்க முடியாத சூழ்நிலையும் இருந்தது.

தற்போது பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. வயநாடு தொகுதியில் நடைபெற போகும் தேர்தலில் பிரியங்காவை போட்டியிட வைத்து எம்.பி.யாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் கார்கே தலைமையில் சந்தித்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாது.

எனவே பிரியங்காவை கட்சியின் செயல் தலைவராக்கினால் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள். இதை வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மூத்த தலைவர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

டெல்லி மேலிட தலைவர்களும் காங்கிரசை வலுப்படுத்த பிரியங்காவின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று கருதுகிறார்கள். கார்கேவின் முதுமை, சோனியாவின் உடல் நலக்குறைவு காரணமாக வலிமையான இளம் தலைவர்கள் கட்சியை வழி நடத்தினால்தான் காங்கிரஸ் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே ராகுலுக்கு துணையாக பிரியங்காவை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்க பரிசீலித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் தற்போது அமைப்பு செயலாளராக இருக்கும் கே.சி.வேணுகோபால் கேரள மாநில தேர்தலையொட்டி அந்த மாநில அரசியலுக்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு சென்றால் அமைப்பு செயலாளர் பதவியும் காலியாக இருக்கும். எனவே இரண்டில் ஒரு பதவி அவருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

பிரியங்கா செயல் தலைவராக வரவேண்டும் என்று வற்புறுத்தி வரும் தமிழக மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

இந்திராவின் வலிமையான தலைமையை இந்தியா இன்றும் கொண்டாடுகிறது. பிரியங்காவையும் பாட்டி இந்திராவின் மறுபதிப்பாக மக்கள் கருதுகிறார்கள். தேர்தலில் அவரது பேச்சும் செயல்பாடும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ராகுலுக்கு காங்கிரசில் செல்வாக்கு இருந்தாலும் பிரியங்காவுக்கு கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும். எனவே பிரியங்கா செயல் தலைவராக வருவது கட்சிக்கு பலம் சேர்க்கும் என்றனர்.

Tags:    

Similar News