லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு பண மாலை அணிவித்து போராட்டம்
- மீன்வளத்துறை அதிகாரி தாமோதர் அலுவலகத்திற்கு சென்றனர்.
- மீனவர்கள் கலெக்டர் யாஸ்மின் பாஷாவிடம் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மெடிப்பள்ளி மாவட்டம், கல்வ கோட்டையில் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியாக இருப்பவர் தாமோதர்.
அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்கம் அமைக்க தாமோதரை அணுகினர். அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தார்.
இந்த நிலையில் மீனவர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என மீனவர்களிடம் தாமோதர் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர் சங்க தலைவர் பிரவீன் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரி தாமோதர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அலுவலகத்தில் இருந்த தாமோதரை அலுவலகத்திற்கு வெளியே இழுத்து வந்து ரூபாய் நோட்டு மாலைகளை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாமோதர் எனக்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இதனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து மீனவர்கள் கலெக்டர் யாஸ்மின் பாஷாவிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.