இந்தியா (National)

ஆந்திராவில் பேய்கள் ராஜ்ஜியம்- ஜெகன்மோகன் ரெட்டி வேதனை

Published On 2024-09-28 04:49 GMT   |   Update On 2024-09-28 04:49 GMT
  • லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
  • லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

திருப்பதி:

திருப்பதி லட்டு தயாரிக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.

அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வருகையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-

ஆந்திராவில் பேய்கள் ராஜ்ஜியம் நடந்து வருகிறது. லட்டு விவகாரத்தில் பா.ஜ.க. கண்ணை மூடிக்கொண்டுள்ளது.

ஒருபுறம் போலீசார் எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டி நோட்டீஸ் அனுப்புகின்றனர். இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு தனது தவறுகளை மறைக்க அண்டை மாநில பா.ஜ.க.வினரை கொண்டு வந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குகிறார்.


இது தவறான செயல். ஏழுமலையானை மதிக்கும் மற்றும் நேசிக்கும் நான் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை.

அதனால் எனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைக்கிறேன். திருப்பதி செல்லும் பயண தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.

100 நாள் ஆட்சியில் நடந்த தோல்விகளை திசை திருப்பவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் லட்டு விவகாரத்தில் பா.ஜ.க கண்ணை மூடிக் கொண்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News