இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி

Published On 2023-09-22 08:18 GMT   |   Update On 2023-09-22 08:18 GMT
  • மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
  • இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது.

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும்.

நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.)எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர்கள் 90 பேரில் 3 அதிகாரிகள் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஓ.பி.சி. பற்றி பேசுகிறார், ஆனால் அவர் ஓ.பி.சி. பிரிவினருக்கு என்ன செய்தார்?

நாட்டில் 5 சதவீத மக்களே எஞ்சிய 95 சதவீத மக்களுக்கு சட்டத்தை உருவாக்குகிறார்கள். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.

இதற்கு 10 ஆண்டுகளாவது ஆகும். சிறப்பு கூட்ட தொடரின் நோக்கமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாதான். எனவே இந்த மசோதாவை உடனே செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.

இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது. எனவே காங்கிரஸ் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெற உள் ஒதுக்கீடு அவசியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News