இந்தியா

ராஜஸ்தானில் அனல் பறக்கும் கடைசி நாள் பிரசாரம்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

Published On 2023-11-23 05:01 GMT   |   Update On 2023-11-23 05:01 GMT
  • காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.
  • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

ஜெய்ப்பூர்:

5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7-ந்தேதியும், 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்துக்கு கடந்த 17-ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி பில்வாரா, துர்காபூரில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தோல்பூர், பரக்பூர் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் இன்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags:    

Similar News