தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்- கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
- தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
- ரசாயனம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதாவது முதல் நாள் தமிழர்களும், 2-வது நாள் வடமாநிலத்தினரும், 3-வது, 4-வது, 5-வது நாள் ஆகிய 3 நாட்களும் கன்னடர்களும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
அதுபோல் இந்த ஆண்டு கர்நாடகத்தில் வருகிற 31-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் நவம்பர் 2-ந்தேதி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடிப்பதால் ஒலி, காற்று மாசு ஏற்படுவதாகவும் எனவே தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாடுகள் சரியான முடிவே என உத்தரவிட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இரவு 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியான ஈஸ்வர் கன்ட்ரே தான் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு தீப ஒளியான தீபம் ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும். பட்டாசுக்கள் வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படும். அதனை தடுக்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதால் முதியோர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ரசாயனம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். சில சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது கண்களில் காயங்கள் ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்படும் நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். இன்னும் பலர் உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏற்படுகிறது. எனவே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
125 டெசிபல் குறைவான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடியுங்கள். தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூட உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நமது மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியின் போது பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கும் போது, வியாபாரிகளிடம் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்க வேண்டும், அவற்றையே குடோன்களில் சேமித்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.
மேலும் அந்த விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு, அடுத்த முறை பட்டாசுகள் விற்கும் அனுமதி வழங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதே வழிமுறைகளை தற்போது தீபாவளி பண்டிகைக்கும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகள் வெடிக்கும்படியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி அனைவரும் கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மந்திரி கூறியபடியே கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.