ஜாபர்சாதிக் தாக்கப்பட்டதாக டெல்லி கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு- அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு
- விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
- 5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
டெல்லியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறையில் வைத்து இன்று 3-வது நாளாக வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று வாக்குமூலம் வாங்கிய போது ஜாபர்சாதிக் தாக்கப்பட்டு மிரட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஜாபர்சாதிக் தரப்பில் அவரது வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அமலாக்கத்துறை விசாரணையின் போது ஜாபர் சாதிக் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து உள்ளனர்.
5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறையினருக்கு பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.