புதிதாக பொறுப்பேற்ற 8 மந்திரிகளின் பின்னணி
- கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல்.
- லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எம்பி பாட்டீல் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.
கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
பரமேஸ்வர்: இவர் துமகூர் மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியை சேர்ந்தவர். தலித் சமுதாயத்தவர். 7 ஆண்டு வரை கர்நாடகா மாநில தலைவராக செயல்பட்டார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது இவர் தான் மாநில தலைவராக இருந்தார். ஆனால் அந்த தேர்தலில் பரமேஸ்வர் தோல்வியடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2018-ல் கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது துணை முதல்வரானார். இந்த முறையும் துணை முதல்வர் பதவி கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மல்லிகார்ஜூன கார்கேவின் ஆதரவாளராக இருக்கிறார்.
கேஎச் முனியப்பா: இவர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இவர் 7 முறை எம்பியாக இருந்துள்ளார். மத்திய மந்திரியாக பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2019 தேர்தலில் கோலார் பாராளுமன்ற தொகுதியில் தோற்ற நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.
ராமலிங்க ரெட்டி: இவர் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் தொகுதியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நிதி, போக்குவரத்து துறை, தொழில்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 2013-2018 சித்தராமையா ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாகவும், பெங்களூர் பொறுப்பு மந்திரியாகவும் செயல்பட்டார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.
கேஜே ஜார்ஜ்: இவர் பெங்களூரு சர்வக்ஞ நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013, 2018 ல் வெற்றி பெற்ற நிலையில் 4-வது முறையாக இப்போது ஜெயித்துள்ளார். இதற்கு முன்பு பாரதிநகர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இதற்கு முன்பும் சித்தராமையா அமைச்சரவையில் பெங்களூரு நகர வளர்ச்சி துறை, உள்துறை மந்திரியாக செயல்பட்டு இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமீர் அகமது கான்: பெங்களூரு சாம்ராஜ் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் ஜே.டி.எஸ். கட்சியில் செயல்பட்டு வந்தார். 2004 முதல் 2013 வரை ஜேடிஎஸ் சார்பில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரசில் இணைந்து 2018-ல் வென்றவர். இந்த முறையும் வெற்றிபெற்று மந்திரி ஆகி உள்ளார்.
எம்.பி. பாட்டீல்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். இவர் இந்த தொகுதியில் 4-வது முறையாக தொடர்ந்து ஜெயித்துள்ளார். இவர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சதீஷ் ஜார்கிகோளி: இவர் பெலகாவி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தலைவராக உள்ளார். இவர் மற்றும் இவரது 3 சகோதரர்கள் அரசியலில் உள்ளனர். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் முந்தைய சித்தராமையா அமைச்சரவையில் வனத்துறை மந்திரியாக இருந்தார்.
பிரியங்க் கார்கே: இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம் சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றார். சித்தராபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக இருந்தார். இன்று பதவி ஏற்ற மந்திரி சபையில் இவர் மிகவும் குறைந்த வயது மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.