டேங்கர் லாரி கவிழ்ந்து டீசல் கொட்டியது- கிணறு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- கிணற்றில் அதிகளவில் டீசல் கொட்டியிருந்ததால் வெகுநேரம் தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது.
- கிணறு தீப்பிடித்து எரிந்ததை பார்க்க ஏதோ எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிவதைப்போன்று காணப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் சீரட்டமலை பகுதி வழியாக டீசல் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ரோட்டோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த லாரியில் 20ஆயிரம் லிட்டர் டீசல் இருந்துள்ளது. லாரி கவிழ்ந்ததில் டேங்கர் உடைந்து அதில்இருந்த டீசல் முழுவதும் வெளியே கொட்டியது. அது அந்த பகுதியில் இருந்த நிலப்பரப்பில் பாய்ந்தோடியது. மேலும் அங்குள்ள வீடுகளில் இருந்த கிணறுகளிலும் டீசல் கொட்டியது.
இந்நிலையில் பிஜூ என்பவர் தனது கிணற்று மோட்டாரை போட்டிருக்கிறார். அப்போது கிணற்றில் கொட்டிக்கிடந்த டீசல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தண்ணீருடன் கலந்திருந்த டீசல் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
கிணற்றில் அதிகளவில் டீசல் கொட்டியிருந்ததால் வெகுநேரம் தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. கிணறு தீப்பிடித்து எரிந்ததை பார்க்க ஏதோ எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிவதைப்போன்று காணப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகுநேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.