போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு... மது மயக்கத்தில் சொந்த கார், பணம், மொபைலை பறிகொடுத்த வாலிபர்
- மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார்.
- வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.
புதுடெல்லி:
மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் அமித்பிரகாஷ்(வயது30). இவர் தனியார் துறையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு கோல்ப் கோர்ஸ் சாலையில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு பாரில் அமர்ந்து மது குடித்தார்.
அப்போது ரூ.2 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தார். உடனே மதுக்கடை உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு ரூ.2 ஆயிரம் போக மீத 18 ஆயிரம் ரூபாயை அவரிடம் திருப்பி கொடுத்தார்.
பின்பு கூடுதல் மது வாங்கிகொண்டு வந்த அமித்பிரகாஷ் வெளியில் வந்ததும் தனது காரில் இருந்தபடி மது குடித்தார். சற்று அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்ததால் போதை அதிகமானது.
இந்த வேளையில் அங்கு வந்த மர்ம நபர் அமித் பிரகாசிடம் வந்து நானும் சேர்ந்து மது குடிக்கலாமா என்றார்.
உச்ச போதையில் இருந்த அமித்பிரகாஷ் சரி என தலை ஆட்டியதோடு மதுவை ஊற்றியும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் அமித்பிரகாசிடம் 'டேய் என்னுடைய காரில் இருந்து மது குடிக்கிறாயா...இறங்குடா' என்று கூறியுள்ளார்.
அதிக போதையில் இருந்த அமித்பிரகாஷ் அது தனது கார் என்பதை மறந்து போதையில் மயங்கி இருந்தார். இந்த வேளையில் மர்ம நபர் கூறியதால் காரை விட்டு இறங்கிய அவர் வாடகை கார் பிடித்து வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.
மறுநாள் அதிகாலையில் விழித்ததும் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது. உச்ச போதையில் தனது காரை இழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அந்த காரில் அமித்பிரகாசுக்கு சொந்தமான லேப் டாப், பர்சில் ரூ.18 ஆயிரம், மொபைல் போன் போன்றவையும் இருந்தன.
காருடன் அவற்றை மர்ம நபர் ஓட்டி சென்றுவிட்டார். அதிக போதையில் காரையும் உடமைகளையும் பறிகொடுத்த அமித்பிரகாஷ் போதை தெளிந்த நிலையில் தான் வசமாக ஏமாந்து போனதை உணர்ந்த பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார்.
அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.