அமேதி தொகுதியில் போட்டியிட ஆதரவு திரட்டும் ராபர்ட் வதேரா
- அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது.
- அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர்.
அமேதி:
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து பா.ஜனதாவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அதுவரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த அமேதி பா.ஜ.க. தொகுதியாக மாறியது.
இந்த தடவை அமேதி தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாரா? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவர் இதை சூசகமாக தெரிவித்தார். நேற்று மீண்டும் 2-வது முறையாக ராபர்ட் வதேரா தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'அமேதி தொகுதி மக்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். அங்கு வந்து போட்டியிடும்படி தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன' என்று கூறினார்.
ராபர்ட் வதேரா மேலும் கூறுகையில், 'நாடு முழுவதிலும் இருந்து என்னை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். என்னை தீவிர அரசியலில் ஈடுபடும்படி வலியுறுத்துகிறார்கள். அதுபற்றி நானும் ஆலோசித்து கொண்டு இருக்கிறேன்.
அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது. அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர். இந்த தடவை அவர்கள் அதை சரி செய்ய வேண்டும்.
அமேதி தொகுதியில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நான் தேர்தலுக்கு வருவதாக சொல்லவில்லை. அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன். அமேதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அமேதியில் ராகுல் போட்டியிட்டால் அவருக்காக நான் பிரசாரம் செய்வேன். ஒருவேளை அரசியலுக்கு வராவிட்டாலும் கூட மக்களுக்காக நான் தொடர்ந்து சேவை செய்வேன்' என்றார்.