கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து- டிராக்டர், லாரி மோதி 5 பக்தர்கள் பலி
- எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
- மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை அடுத்த முனுகளா பகுதியே சேர்ந்த 38 பேர் அருகில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை டிராக்டரில் சென்றனர்.
நள்ளிரவு பூஜை முடிந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதிகாலை 3 மணிக்கு டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
நெடுஞ்சாலை வழியாக சென்றால் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டும்.
எனவே நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் டிராக்டரை டிரைவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது
டிராக்டரில் சென்றவர்கள் நாலாபுறமும் சிதறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.
இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு, கோட்டைய்யா (வயது 45), ஜோதி (38), பிரமிளா (35), சிந்த காய் பிரமிளா (32), லோகேஷ் (10). மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சூர்யா பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.