உத்தரபிரதேசம் ஓட்டலில் சைவ உணவு ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம்
- பன்னீர் பிரியாணிக்கு பதில் சிக்கன் பிரியாணி வந்தது வேதனையாக உள்ளது.
- ஆர்டர் வினியோகம் செய்த ஊழியரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் தான் கேட்க வேண்டும் என கூறினார்.
ஆன்லைன் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது சில நேரங்களில் ஆர்டர் மாறி விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.இது தொடர்பாக வாரணாசியை சேர்ந்த அஸ்வினி சீனிவாசன் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், எனது நண்பர் சோமோட்டோவின் மூலம் அதே பகுதியில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் ரூ.1,228-க்கு பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு சிக்கன் பிரியாணி வந்துள்ளது. அவர்களது குடும்பம் ஒரு போதும் அசைவ உணவு சாப்பிட்டதில்லை. ஆரம்பத்தில் பன்னீர் பிரியாணி என்று நினைத்து அவர்களது குடும்பத்தினர் அதனை சாப்பிட்ட போது தான் அது சிக்கன் என தெரிய வந்தது.
இதுபோன்று பன்னீர் பிரியாணிக்கு பதில் சிக்கன் பிரியாணி வந்தது வேதனையாக உள்ளது. உடனே ஆர்டர் வினியோகம் செய்த ஊழியரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் தான் கேட்க வேண்டும் என கூறினார். ஆனால் அவர்களும் உரிய பதில் அளிக்கவில்லை. இதற்கு யார் தான் பொறுப்பு? என கூறியிருந்தார். அதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு சிலர் சோமோட்டாவுக்கு ஆதரவாகவும், சிலர் மாற்று கருத்துக்களையும் பதிவிட்டு வருவதால் ஒரு விவாதமாகவே மாறியுள்ளது.