இந்தியா

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி உள்பட 16பேர் போட்டி

Published On 2024-11-01 07:26 GMT   |   Update On 2024-11-01 07:26 GMT
  • வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
  • வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகி விட்டதால் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானது. அதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இந்தவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதிவியேற்றதால் அந்த தொகுதிகளும் காலியாகின.

இதனால் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்தமாதம் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

அவர்களுடன் சேர்த்து வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 28-ந்தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அன்றைய தினம் வரை யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

அங்கு பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகி விட்டதால் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News