மூணாறில் சுற்றுலா பயணிகளின் காரை உடைத்த காட்டு யானை
- தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழா பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் மற்றும் தாமஸ். இவர்கள் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவரை பார்க்க சென்றனர்.
அவர்கள் தாங்கள் வந்த காரை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவர்களது காரை சேதப்படுத்தியது. இதில் அவர்களது கார் உடைந்து சேதமானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊருக்குள் புகுந்திருந்த காட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானைகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரவித்தனர். தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கியிருப்பது, சுற்றுலா பயணிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.