அமைச்சருக்கு ரூ.15 கோடி லஞ்சம் கொடுக்க சொன்னார்கள்.. ஊழல் குறித்து ரத்தன் டாடா கூறியவை
- ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
- ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
2010 ஆம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரத்தன் டாடா, "அமைச்சர் ஒருவருக்கு 15 கோடி கொடுத்தால் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஒரு தொழிலதிபர் எனக்கு ஆலோசனை கூறினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
அப்போது அந்த தொழிலதிபர், "நீங்கள் ஏன் அமைச்சருக்கு பணம் கொடுக்கக்கூடாது. அமைச்சருக்கு 15 கோடி தேவைப்படுகிறது. உங்களுக்கு விமான ஒப்பந்தம் தேவையில்லையா? நீங்கள் ஒரு முட்டாள்" என்று அவர் கூறினார்.
"உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை. நான் பணம் கொடுத்து விமான ஒப்பந்தம் பெறவில்லை என்று தெரிந்த பின்பு இரவு வீட்டிற்கு சென்று தூங்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்திற்காக நான் அவருக்கு பணம் கொடுத்திருந்தால் நான் மிகவும் அவமானமாக உணர்ந்திருப்பேன்" என்று அவரிடம் தெரிவித்ததாக ரத்தன் டாடா கூறினார்.
ஆனால் அந்த அமைச்சர், தொழிலதிபரின் விவரங்களை ரத்தன் டாடா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.