சந்திரசேகர ராவ் எங்கே? - கே.டி.ஆர். மீது சந்தேகம் கிளப்பும் பெண் மந்திரி
- கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார்.
- கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்கு தொடர்வதாக கூறினார்.
கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார். மேலும் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நானி, நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே மந்திரி சுரேகா தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 24 மணி நேரத்திற்குள் பெண் மந்திரி மன்னிப்பு கேட்க தவறினால் அவதூறு வழக்கு மற்றும் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
இருப்பினும், சமந்தாவிடம் மன்னிப்பு கோரிய சுரேகா, கே.டி.ராமராவ் மீதான தனது விமர்சனத்தை திரும்பபெற மாட்டேன் என்றும் மன்னிப்பு கோர முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சந்திரசேகர ராவ் எங்கே என வினவியுள்ள சுரேகா, பொது வெளியில் சந்திரசேகர ராவ் காணாமல் போனதற்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரசேகர ராவ் போட்டியிட்டு வெற்றி பெற்ற கஜ்வேலி தொகுதிக்கு சென்ற சுரேகா கட்சி நிர்வாகிகளிடம், சந்திரசேகர ராவ் காணாமல் போனதாக வழக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார்.
கே.சி.ஆர். மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் பொதுவெளியில் வராததற்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என் கொண்டா சுரேகா பேசி உள்ளார்.