தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து- ரெயில் சேவை கடும் பாதிப்பு
- சரக்கு ரெயில் தடம் புரண்டதால் 20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவா புரம் மற்றும் ராமகுண்டம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு இரும்பு தாது ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்றது.
திடீரென சரக்கு ரெயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் தண்டவாளம் பெருமளவில் சேதம் அடைந்தது. என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மற்றும் தண்டவாள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 4 ரெயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 10 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தப்பள்ளி நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.
இதையடுத்து மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது.
பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது.
பயணிகளின் நலனுக்காக உதவி எண்கள் வழங்கப்பட்டு வருவதாக தெற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.