நாகலாந்தில் ஒரே தொகுதியில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ் காலமானார்
- திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
- மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.
நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.
கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.