இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2023-09-09 05:58 GMT   |   Update On 2023-09-09 05:58 GMT
  • ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
  • இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது. இவன் கடந்த ஜனவரி 1-ந் தேதி காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்ரி கிராமத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.

தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதி ரியாஸ் அகமதுவை இந்தியா தீவிரமாக தேடி வந்தது.

இந்நிலையில் தீவிரவாதி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. தீவிரவாதி ரியாஸ் அகமது முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா முகாமில் செயல்பட்டான். சமீபத்தில் ராவல் கோட்டில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான். மேலும் அந்த அமைப்பின் நிதியையும் கவனித்து வந்துள்ளான்.

இந்த ஆண்டில் எல்லைக்கு வெளியே இருந்து செயல்படும் உயர்மட்ட பயங்கரவாத தளபதி கொல்லப்பட்ட 4-வது சம்பவம் இதுவாகும்.

Tags:    

Similar News