ஆபரேசன் காவேரி - சூடானில் இருந்து 2வது கட்டமாக 121 இந்தியர்கள் மீட்பு
- சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு ஜெட்டா வந்தடைந்தது.
- தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
புதுடெல்லி:
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வந்தடைந்தது. சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சூடானில் மீட்கப்பட்ட 121 இந்தியர்கள் கொண்ட இரண்டாவது குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் புறப்பட்டது.