ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று மாலை இறுதி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது
- கடந்த செப்டம்பர் 2-ந்தேதி ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
- சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
பெங்களூரு:
சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி 'ஆதித்யா-எல்1' விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று மாலை அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
இன்று மாலை சுமார் 4 மணிக்கு லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள 'ஹாலோ' சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த இடம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
அந்த இடம், எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான இடம் ஆகும். விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சூரியனின் எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும்.
சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆதித்யா திட்டம் வெற்றி பெற்றால் அந்த வரிசையில் இந்தியா 5-வது நாடாக இணையும்.